திருவண்ணாமலை, ஆரணி தொகுதியில் 2-வது நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை


திருவண்ணாமலை, ஆரணி தொகுதியில் 2-வது நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை
x
தினத்தந்தி 21 March 2019 4:23 AM IST (Updated: 21 March 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, ஆரணி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருவண்ணாமலை,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி 2019-ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் பொதுத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரிடமும், ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே தளத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலரிடமும் வேட்பு மனுக்களை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அது மட்டுமின்றி திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

முதல் நாளான நேற்று முன்தினம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு மனிதன் என்பவர் பின்னோக்கி நடந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் 2-ம் நாளான நேற்று திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசாரின் எண்ணிக்கை மட்டும் அதிகளவில் காணப்பட்டது.


Next Story