திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கொளுத்தும் வெயிலிலும் திரளான பக்தர்கள் கிரிவலம்


திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு கொளுத்தும் வெயிலிலும் திரளான பக்தர்கள் கிரிவலம்
x
தினத்தந்தி 21 March 2019 4:29 AM IST (Updated: 21 March 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கொளுத்தும் வெயிலிலும் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை,

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் நகரின் மையப்பகுதியில் மகா தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலமும் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று பங்குனி மாத பவுர்ணமியையொட்டி காலை 9.41 மணிக்கு கிரிவலம் தொடங்கியது. இன்று காலை 7.28 மணி வரை பவுர்ணமி உள்ளது. அந்த நேரம் வரை விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் பெரும்பாலான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாலையில் நேரம் செல்லச், செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

கிரிவலத்தை முன்னிட்டு கோவிலிலும், திருவண்ணாமலை நகரத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் நேற்று அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டது.


Next Story