‘பணம், அச்சுறுத்தலுக்கு பணியவேண்டாம்’ முதல்முறை வாக்காளர்களுக்கு கலெக்டர் அருண் கடிதம்
‘பணம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பணியவேண்டாம்’ என்று முதல் முறை வாக்காளர்களுக்கு கலெக்டர் அருண் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு தேர்தல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் வேண்டுகோள் கடிதம் கொடுக்கும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியின் வேண்டுகோள் கடிதத்தை உதவி கலெக்டர் அபிசேக் வழங்கினார்.
வாக்காளர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் புதுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
நமது பாரம்பரியமிக்க இந்திய ஜனநாயகத்தின் மதிப்புக்குரிய வாக்காளராக தங்களை பதிவு செய்து கொண்டதற்கு வாழ்த்துக்கள். ஏப்ரல் 18–ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக தங்களுடைய வாக்கினை பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தவறாமல் வாக்களிக்கவும், மற்றவர்களை வாக்களிக்க ஊக்குவிக்கவும், சரியான நபர் யார் என்பதை யோசித்து வாக்களிக்கவும், பணம் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பணியாதீர்கள்.
தேர்தல் விதிமீறல்கள் பற்றி தெரியவந்தால் சிவிஜில் என்ற செயலி மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். இந்த வசதியினை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும். மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் முன்னுரிமையும் அளிக்கப்படும்.வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18–ந்தேதியை மறக்கவேண்டாம். முதல் வாக்கினை பதிவு செய்வதில் தாங்கள் முதல் நபராக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் வாக்காளர் கல்வி முதன்மை அதிகாரி செழியன் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.