சூலூர் தொகுதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணம் , முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ் நேற்று அதிகாலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆர்.கனகராஜ் (வயது 67). இவர் சுல்தான்பேட்டை ஒன்றியம் காமநாயக்கன்பாளையம் வி.மேட்டூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை எழுந்த அவர் வழக்கம்போல் காலை 8.40 மணியளவில் செய்தித்தாள் படித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது குடும்பத்தினர் டாக்டர்களை வரவழைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ. மரணமடைந்த செய்தி கேட்டு கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் வீட்டின் முன்பு திரண்டனர். அவரது உடல் அங்கிருந்து காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள வி.வடுகபாளையத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால்,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் வி.வடுகபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து வேன் மூலம் அருகில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாலை 5.30 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.கனகராஜ் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காமநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 2016-ம் ஆண்டு சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இவர் போட்டியிட்ட உள்ளாட்சி தேர்தல் முதல் சட்டசபை தேர்தல்வரை தோல்வியை சந்திக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கனகராஜ் எம்.எல்.ஏ.வுக்கு கே.ரத்தினம் என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், பாமா விஜயா என்ற மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சூலூர் தொகுதி ஓட்டு விவரம் வருமாறு:-
கனகராஜ் (அ.தி.மு.க.)- 1,00,977
வி.எம்.சி.மனோகரன் (காங்கிரஸ்)- 64,346
மோகன் மந்திராசலம் (பா.ஜனதா)- 13,517
தினகரன் (தே.மு.தி.க.)- 13,106
பிரீமியர் செல்வம் என்கிற காளிச்சாமி (கொ.ம.தே.க.)- 9,672
தற்போது 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. கோர்ட்டில் வழக்குகள் விசாரணையில் இருப்பதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை. தற்போது சூலூர் தொகுதியில் கனகராஜ் எம்.எல்.ஏ. மரணம் அடைந்துவிட்டதால் 4 தொகுதிகள் காலியாக உள்ளது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று குறைந்துள்ளது.
Related Tags :
Next Story