குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: மாவட்ட அளவில் புகார் தெரிவிக்க அதிகாரிகள் நியமனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: மாவட்ட அளவில் புகார் தெரிவிக்க அதிகாரிகள் நியமனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 22 March 2019 4:15 AM IST (Updated: 22 March 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி,

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த காலங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த பிரிவுகள் குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசம் இன்றி வழக்குகளை கையாண்டன. தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ) உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டத்தின்படி பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படமெடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை குற்றங்களாக இந்த சட்டம் கூறுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம். போலீசார், பாதுகாப்பு படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள், பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களே குற்றம் செய்தால் அதிக தண்டனை கிடைக்க இந்த சட்டம் வழிவகை செய்து உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய போக்சோ கமிட்டி மூலம், தூத்துக்குடி மாவட்ட அளவில் புகார்கள் பெறுவதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லிங்கதிருமாறன், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி, மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், பெண் போலீஸ் ஏட்டு அபிராமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story