தஞ்சையில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


தஞ்சையில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x
தினத்தந்தி 22 March 2019 4:00 AM IST (Updated: 22 March 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலை அண்ணாநகரில் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர தீமிதி திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்புஅலங்காரம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்காள ஈஸ்வரி அம்மன், முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து அங்காள ஈஸ்வரி அம்மன் சிலை முன்செல்ல பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

இவர்களில் பலர் காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் வந்தனர். முக்கியவீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக வந்து அண்ணாநகரில் உள்ள கோவில் திடலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை தெற்கு மற்றும் தாலுகா போலீசார் செய்து இருந்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல், அம்மன் ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி, விடையாற்றி விழா நடக்கிறது.

இதேபோல திருக்காட்டுப்பள்ளி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக ஒன்பத்து வேலியில் உள்ள தெருக்கள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர்.

Next Story