ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்


ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை புதுச்சேரியில் உயிருடன் மனைவி எரித்துக் கொலை குடும்ப தகராறில் தொழிலாளி ஆத்திரம்
x
தினத்தந்தி 21 March 2019 10:00 PM GMT (Updated: 21 March 2019 10:00 PM GMT)

புதுச்சேரியில் ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கொம்பாக்கம் ஏரிக்கரை குப்பைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயநாதன் (வயது 50). களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி வனஜா (40). இவர்களுக்கு பன்னீர்செல்வநாதன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து கணவருடன் கோபித்துக் கொண்டு வாணரப்பேட்டையில் உள்ள தாயாரின் வீட்டிற்கு வனஜா சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயநாதன், வனஜாவின் வீட்டிற்கு சென்று அவருடன் பேசி சமாதானம் செய்து கொம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். இவர்களது மகன் பன்னீர்செல்வநாதன் வழக்கம்போல் நேற்று காலை கல்லூரிக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜெயநாதன், வனஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்காமல் கணவனிடம் இருந்து தப்பிக்க மாடிக்கு செல்வதற்காக அங்கு இருந்த இரும்பு ஏணிப்படிக்கட்டில் வனஜா ஏற முயன்றார். ஆனால் ஜெயநாதன் அவரை தடுத்து சரமாரியாக தாக்கினார். அங்கு கிடந்த இரும்பு சங்கிலியை எடுத்து ஏணிப்படியுடன் சேர்த்து வனஜாவின் காலில் கட்டினார்.

இதன்பின் உடலில் கத்தியால் வெட்டி அவரை சித்ரவதை செய்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் வனஜா அலறி துடித்துள்ளார். இதன்பிறகும் ஆத்திரம் தீராத ஜெயநாதன் வீட்டில் மகனின் மோட்டார் சைக்கிளுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து வனஜாவின் மீது ஊற்றினார். மனைவி என்றும் பாராமல் உயிரோடு அவரை தீவைத்து கொளுத்தினார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து வனஜா அலறி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர்களது வீடு அந்த இடத்தில் தனியாக இருந்ததால் வனஜாவின் அலறல் சத்தம் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை என்று தெரிகிறது.

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கருகிய நிலையில் கிடந்த வனஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்த ஜெயநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து ஜெயநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story