நிகில் வேட்புமனு தாக்கல் முடிவை திடீரென மாற்றிய குமாரசாமி


நிகில் வேட்புமனு தாக்கல் முடிவை திடீரென மாற்றிய குமாரசாமி
x
தினத்தந்தி 22 March 2019 5:26 AM IST (Updated: 22 March 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மண்டியா திகழ்கிறது. ஏனெனில் இங்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் களமிறங்குகிறார்.

நிகில் குமாரசாமியை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக சுமதலா தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்றார். ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் மண்டியா நகரமே குலுங்கியது. இந்த அளவுக்கு கூட்டம் கூடியதை பார்த்து குமாரசாமி உள்ளிட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே நிகில் குமாரசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் சுமலதாவுக்கு கூடிய கூட்டத்தை விட, அதிகளவில் கூட்டத்தை திரட்டி தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி உள்ளது.

இதனால் நேற்று நிகில் குமாரசாமி வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 25-ந்தேதி அவர் மண்டியா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிகிலின் தந்தையான குமாரசாமி ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் நிகில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது நிகில் குமாரசாமிக்கு தற்போதைய சூழ்நிலையில் அரசியல் எதிர்காலம் சரியில்லை எனவும், அதற்காக நிகில் குமாரசாமி மார்ச் 21-ந்தேதி மற்றும் 25-ந்தேதி ஆகிய நாட்களில் 2 தடவை வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் உலா வருகிறது.

மேலும் நடிகை சுமலதாவுக்கு அதிகளவில் கூட்டம் திரண்டதால், தங்களது பலத்தை நிரூபித்து காட்டும் வகையில் நிகில் குமாரசாமியின் வேட்பு மனுதாக்கலை 25-ந்தேதிக்கு குமாரசாமி மாற்றி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Next Story