புதிய பாசன திட்டத்தை நிறைவேற்றக்கோரி 152 கிராமங்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்


புதிய பாசன திட்டத்தை நிறைவேற்றக்கோரி 152 கிராமங்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2019 4:15 AM IST (Updated: 23 March 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதிகளில் புதிய பாசன திட்டத்தை நிறைவேற்றக்கோரி 152 கிராமங்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் வகையில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திப்பரவு அணைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த திட்டம் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படவில்லை.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி பகுதி விவசாயிகள் சங்கத்தினர், திப்பரவு அணைத்திட்டத்துக்கு மாற்றாக கம்பம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்துக்கு ராட்சத குழாய் மூலம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த புதிய பாசன திட்டம் தொடர்பாக நடைபெற இருக்கின்ற தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆளுங்கட்சி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் இந்த திட்டத்துக்கு வாக்குறுதி அளிக்கவில்லை.

இதையடுத்து நடந்த விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 கிராம ஊாட்சிகளில் உள்ள 152 கிராமங்களிலும் வீடுகளின் முன்பு கருப்புக்கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை காட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று ஆண்டிப்படடி ஒன்றியத்தின் கிழக்கு எல்லை கிராமமான ஏத்தகோவில் பகுதியில் இருந்து தொடங்கி சித்தையகவுண்டன்பட்டி, அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி உள்ளிட்ட 152 கிராமங்களிலும் வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். சித்தையகவுண்டன்பட்டியில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் விவசாயிகள் சங்கத்தினர் வருகிற நாடாளுமன்ற தேர்தலையும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலையும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story