குடிநீர் வழங்கக்கோரி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகை
திருமருகல் அருகே குடிநீர் வழங்கக்கோரி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி புதுக்கடை கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை தொடர்ந்து குடிநீர் வழங்கக்கோரி அந்த கிராம மக்கள் அண்ணா மண்டபம் மெயின் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது திருமருகல் ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச் செல்வன், குடிநீர் குறித்து ஆய்வு செய்ய புதுக்கடை கிராமத்திற்கு காரில் வந்தார். இதை பார்த்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அதிகாரி தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எங்கள் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. உடனடியாக தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் எங்கள் கிராமத்தில் குடிநீர் தொட்டிகள் இருந்தும் அதில் இருந்து நீண்ட காலமாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதுபற்றி ஊராட்சி செயலாளரிடம் பலமுறை தெரிவித்தும் குடிநீர் வழங்கப்படவில்லை என்றனர். இதையடுத்து புதுக்கடை கிராமத்திற்கு இன்று(அதாவதுநேற்று) குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். குடிநீர் தொட்டியின் பழுதடைந்த மின் மோட்டாரை அகற்றி விட்டு புதிய மின் மோட்டாரை அமைத்து தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அந்த ஊராட்சி செயலாளருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story