அடிப்படை வசதி கேட்டு கிராமமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி சாலை மறியல்


அடிப்படை வசதி கேட்டு கிராமமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி சாலை மறியல்
x
தினத்தந்தி 23 March 2019 4:15 AM IST (Updated: 23 March 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகேட்டு கிராமமக்கள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

டி.என்.பாளையம்,

டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8, 9, வார்டுகளில் (பள்ளத்தூர், கள்ளியங்காடு) 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் தெருவிளக்கு, குடிநீர், ரேஷன் கடை வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை பள்ளத்தூர், கள்ளியங்காடு பகுதியை சேர்ந்த கிராமமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் அத்தாணி ரோட்டில் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பங்களாபுதூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டார்கள். உடனே கிராம மக்கள் மாற்றுப்பாதைக்கும் மறியல் செய்ய ஓடினார்கள். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி ஆர்.டி.ஓ. அசோகன், சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் பொதுமக்களிடம், ‘தேர்தல் முடிந்த பின்னர் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்‘ என்று உறுதி கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டு கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

Next Story