மாவட்டம் முழுவதும் வாகனங்களில் மணல் கடத்தல் அதிகரிப்பு கடும் நடவடிக்கை தேவை


மாவட்டம் முழுவதும் வாகனங்களில் மணல் கடத்தல் அதிகரிப்பு கடும் நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 22 March 2019 10:29 PM GMT (Updated: 22 March 2019 10:29 PM GMT)

மாவட்டம் முழுவதும் வாகனங்களில் மணல் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட மணல்குவாரிகளில் விதிமுறை மீறல்களை தடுக்கவும், அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் வக்கீல் கமி‌ஷனர் மூலம் அறிக்கைகள் பெற்று மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனுமதியின்றி லாரிகளிலும், டிராக்டர்களிலும் மணல் கடத்தல் நடப்பது அதிகரித்து வருகிறது.

குண்டாறு, அர்ஜுனா நதி, வைப்பாற்று படுகைகளில் எந்தவித அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகளிலும், டிராக்டர்களிலும் மணல் கடத்தப்படும் சம்பவம் நடந்து வருகிறது. போலீசார் அவ்வப்போது அனுமதியின்றி மணல் கடத்தியதாக லாரிகளையும், டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, அதன் டிரைவர்களையும் கைது செய்கின்றனர்.

லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் அவர்கள் மீது பெரும்பாலும் கைது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

இவ்வாறு அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது தான். மணல் கடத்தும் லாரி, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும் குறைந்த அபராத தொகை விதிக்கப்பட்டு அவை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுகிறது.

மணல் கடத்தல் தடுப்பு வழக்கில் கைது செய்யப்படும் ஊழியர்களும் குறைந்த அபராத தொகை கட்டிவிட்டு வெளியே வந்து விடுகின்றனர். இதனால் மணல் கடத்தல் சம்பவங்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகம் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்ற நீதிக்கு ஏற்ப மணல் கடத்தலை தடுக்க கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


Next Story