எட்டயபுரம், விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்


எட்டயபுரம், விளாத்திகுளத்தில் வாகன சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2019 4:45 AM IST (Updated: 23 March 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம், விளாத்திகுளத்தில் நடந்த வாகன சோதனையின்போது, உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5¼ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எட்டயபுரம்,

எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் எட்டயபுரம்-விளாத்திகுளம் மெயின் ரோடு நாற்கர சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.3 லட்சத்து 88 ஆயிரத்து 500-ஐ எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், அவர் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி வீரமாமுனிவர் தெருவைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான தேவசகாயம் (வயது 48) என்பதும், விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சேதுராமனிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பணத்தை விளாத்திகுளம் கிளை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த பணத்துக்கான உரிய ஆவணத்தை செலுத்தி, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு தேவசகாயத்திடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதேபோன்று கோவில்பட்டி ரெயில்வே நில எடுப்பு தாசில்தார் ரேணுகாதேவி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் நேற்று காலையில் விளாத்திகுளம் அருகே சூரங்குடி-வேம்பார் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 500 எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளின் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பஷீர் உசேன் மகன் முகம்மது காசிம் (26) என்பதும், அவர் தன்னுடைய நண்பர்களுடன் தூத்துக்குடியில் புதிய வேனை தவணை முறையில் வாங்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், விளாத்திகுளம் கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்துக்கான உரிய ஆவணத்தை செலுத்தி, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு முகம்மது காசிமிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story