மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் செக்‌ஷன்-17 நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - ஊட்டியில் ஆ.ராசா பேச்சு


மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் செக்‌ஷன்-17 நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - ஊட்டியில் ஆ.ராசா பேச்சு
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 10:59 PM GMT)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் செக்‌ஷன்-17 நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஊட்டியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பேசினார்.

ஊட்டி,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணி சார்பில் நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து வேட்பாளர் அறிமுக கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஆ.ராசா ஊட்டிக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊட்டி சேரிங்கிராசில் காரில் நின்றபடி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

நான் நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னை இந்த தொகுதியில் போட்டியிட வைத்தார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பேரிடர் ஏற்பட்ட நேரத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்றினேன்.

பின்னர் 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு அடிக்கடி வந்து மக்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது, இந்தியாவின் தொழில் முன்னேற்றம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் பா.ஜனதா ஆட்சியில் தொழில் முன்னேற்றம் குறைந்து விட்டது.

பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால் இதுவரை எந்தவித வேலைவாய்ப்பும் வழங்கப்பட வில்லை. பா.ஜனதா உடன் அ.தி.மு.க., பா.ம.க. கொள்கை இல்லாத கூட்டணி அமைத்து உள்ளது. எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கவும் தொண்டர்கள், பொதுமக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கூடலூர் செக்‌ஷன்-17 நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ., திராவிடமணி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story