திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 22 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.61 லட்சம் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெங்களூரு,
பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள குமாரசாமி லே-அவுட், புட்டேனஹள்ளி, தலகட்டபுரா, கோனனகுன்டே, சுப்பிரமணியபுரா போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டன. மீ்ட்கப்பட்ட பொருட்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை கலந்து கொண்டு மீட்கப்பட்ட நகைகள், வாகனங்களை பார்வையிட்டார். பின்னர் அவர், அந்த நகைகள், வாகனங்களை உரிமையாளர்களிடம் வழங்கினார். முன்னதாக துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு குமாரசாமி லே-அவுட், சுப்பிரமணியபுரா, கோனனகுன்டே, தலகட்டபுரா, புட்டேனஹள்ளி, குமாரசாமி லே-அவுட் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நகரில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 500 கிராம் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு கார், ஒரு ஆட்டோ, 48 இருசக்கர வாகனங்கள், ரூ.2 லட்சம், ஒரு கிலோ கஞ்சா, கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும்.
இதன் மூலம் நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த திருட்டு, கொள்ளை உள்பட 64 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.