5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு


5 மாடி கட்டிடம் இடிந்ததில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்வு : 3 நாட்களுக்கு பிறகு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 23 March 2019 4:57 AM IST (Updated: 23 March 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

தார்வாரில், 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 நாட்களுக்கு பிறகு ஒரு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

உப்பள்ளி, 

இடிபாடுகளில் சிக்கியுள்ள 12 பள்ளி மாணவிகளை உயிருடன் மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக 5 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தின் கட்டிட பணிகள் முடிவடைந்து கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 19-ந் தேதி அந்த கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளின் கட்டிட பணிகள் நடந்து வந்தன. கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோல் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கும் 12 பள்ளிக்கூட மாணவிகள் வந்து பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் 19-ந் தேதி மதியம் 4 மணியளவில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கடைகளில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் இருந்த 12 மாணவிகள் என அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இதேபோல் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

முதல்நாளில் 2 பேரின் உடல்களும், 2-வது நாளில் 5 பேரின் உடல்களும், 3-வது நாளில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. அப்போது மேலும் 2 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனால் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே நேற்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு தம்பதியை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். அந்த தம்பதியின் பெயர் திலீப் மற்றும் சங்கீதா ஆகும். அதேபோல் ஒரு வாலிபரையும் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். அவருடைய பெயர் கங்கண்ண கவுடா ராமனகவுடா என்பதாகு. இவர்கள் 3 பேரும் அந்த வணிக வளாகத்தில் இருந்த கடைகளில் பொருட்கள் வாங்க வந்திருந்ததும், அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருந்ததை மீட்பு குழுவினர் நவீன எந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொண்டு கண்டறிந்தனர். பின்னர் அவர்களை உயிருடன் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த தம்பதி உள்பட 3 பேரும் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடிபாடுகளுக்குள் 12 பள்ளிக்கூட மாணவிகள் உயிருடன் இருப்பதாக மீட்பு குழுவினருக்கு தெரியவந்துள்ளது. அவர்களை உயிருடன் மீட்க தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் போராடி வருகிறார்கள்.


Next Story