மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை: தம்பதி உள்பட 4 பேர் கைது


மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை: தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2019 5:24 AM IST (Updated: 23 March 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

மாட்டுங்காவில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

மும்பை,

மும்பை, மாட்டுங்கா லேபர்கேம்ப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூதாட்டி வசந்தா(வயது81). இவரது வீட்டுக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் மர்ம ஆசாமிகள் நுழைந்தனர். அவர்கள் துப்பட்டாவால் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

தகவல் அறிந்து சென்ற சாகு நகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அக்பர் (வயது35) மற்றும் அவரது மனைவி சமீர் என்ற சானு(34) ஆகியோர் சம்பவம் நடந்த நாள் முதல் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சோ்ந்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.

சானு மூதாட்டியுடன் நன்றாக பழகி வந்துள்ளார். தனியாக வசித்து வரும் மூதாட்டியின் நகைகள் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே அவர் கணவருடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார். சம்பவத்தன்று அவர் கணவருடன் மூதாட்டியின் வீட்டுக்குள் சென்றார். பின்னர் அவர்கள் தங்களது கூட்டாளிகளான முகமது அசன்(25), முகமது(29) ஆகியோரை மூதாட்டியின் வீட்டுக்கு வரவழைத்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மூதாட்டியை கொன்று, நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிஓடியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அக்பர், அவரது மனைவி சானு கூட்டாளிகளான முகமது அசன், முகமது ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் தங்க நகைகளை மீ்ட்டனர்.

Next Story