தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 23 March 2019 5:29 AM IST (Updated: 23 March 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டம் தற்போது ரூ.359 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் நானும், அமைச்சர் கே.பி.அன்பழகனும் இணைந்து தர்மபுரி மாவட்டத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வருவோம். குறிப்பாக நீர்பாசன திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்துவோம். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை கொண்டு வந்து அங்கு பன்னாட்டு நிறுவனங்களை அமைத்து பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் எங்கள் மெகா கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிவானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் ருக்மணி தேவி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் இதுவரை மொத்தம் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story