சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்


சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
x
தினத்தந்தி 23 March 2019 12:38 AM GMT (Updated: 23 March 2019 12:38 AM GMT)

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

சேலம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது.

4-வது நாளான நேற்று தி.மு.க சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரோகிணியிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கந்தசாமி, சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

அதே போன்று சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) கட்சி பொறுப்பாளர் மோகன் (வயது 65), தேசிய மக்கள் கழக கொள்கை பரப்பு செயலாளர் சேலம் இந்திரா நகரை சேர்ந்த கலைமணி (39), பகுஜன் சமாஜ் கட்சி சேலம் மாவட்ட பொது செயலாளர் சடையன் (38), சுயேச்சை வேட்பாளர் தளவாய்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவராமன் (40) ஆகியோர் என 5 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் மற்றும் சேலம் மாநகர போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story