நாகர்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 March 2019 6:26 AM IST (Updated: 23 March 2019 6:26 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போன்று மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பேரணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் முன் இருந்து தொடங்கிய இரு சக்கர வாகன பேரணியானது நகரின் முக்கிய இடங்களுக்கு சென்றது. பின்னர் வடசேரி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

பேரணியில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனம் ஓட்டினர். மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த பதாகைகளை இருசக்கர வாகனத்தின் முன் வைத்திருந்தனர். அதோடு இந்த பேரணியில் நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள் ஆகியோரும் பங்கேற்று, ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், மகளிர் திட்ட இயக்குனர் பிச்சை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story