பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிக்கான ஒப்பந்த காலம் டிசம்பர் வரை நீட்டிப்பு அதிகாரிகள் தகவல்


பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிக்கான ஒப்பந்த காலம் டிசம்பர் வரை நீட்டிப்பு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 6:45 PM GMT)

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கான ஒப்பந்த காலம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சியை முழுசுகாதாரமாக மாற்றும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.109 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் பொள்ளாச்சி நில அமைப்புப்படி 5 கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் நீர்உந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் தாழ்வான பகுதிகளில் 16 மேல் உந்து நிலையங்கள் மற்றும் 5 கழிவுநீர் நிலையங்கள் மூலமாக கழிவுநீரை சேகரித்து, சந்தை பேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்யப்படுகின்றன. அங்கு தினமும் 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணாகுளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மாட்டு சந்தையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு 7907 ஆள்இறங்கு குழிகள் அமைக்க வேண்டும். அதில் 7000 ஆள்இறங்கு குழிகள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டன. 191 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்க வேண்டும். இதில் 140 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிந்து விட்டன. பாதாள சாக்கடை திட்ட பணிகள் 72 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

மாட்டு சந்தையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு யூனிட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அருகில் மற்றொரு யூனிட் அமைக்கப்படுகிறது. இதற்காக கம்பி கட்டி கான்கீரிட் போடும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் அந்த யூனிட் அமைக்கும் பகுதியில் தண்ணீர் ஊற்று எடுப்பதால் பணிகள் மேற்கொள்வதில் சிரமமாக உள்ளது. இதற்காக தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்ட போது சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கட்டுமான பொருட்களுக்கு 12 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒப்பந்தம் போடப்பட்டு 2 ஆண்டுகள் ஆவதாலும், தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி பெறுவதற்கு ரூ.12 கோடி வரை கேட்கின்றனர். இதில் ரூ.9 கோடி வரை நிதி கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவே ரூ.60 கோடி கூடுதலாக கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தற்போது முதற்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்ததும் 6 மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பிறகு பணிகளை மேற்கொண்ட நிறுவனம் 5 ஆண்டுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும். இதையடுத்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும் தாழ்வான பகுதியில் 16 கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைப்பதாக இருந்தது. தற்போது அது 10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் 5 கழிவுநீர் நிலையங்களில் வடுகபாளையம், ஜோதி நகரை நீக்கி 3 கழிவுநீர் நிலையங்கள் மட்டும் அமைக்கப்பட உள்ளது. மேலும் நகர பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 191 கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ளப்படுவதாக கணக்கெடுக்கப்பட்டது. இதில் தனியார் இடங்கள் வருவதால் ஒரு கிலோ மீட்டர் தூரங்கள் குறைக்கப்படுகின்றது. இதுதொடர்பாக நகராட்சிக்கு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை மற்றும் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த காலமான அடுத்த மாதத்திற்குள் முடிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஒப்பந்த காலத்தை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story