‘மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்’ தொல்.திருமாவளவன் பேச்சு
மத்திய, மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று தொல்.திருமாவளவன் பேசினார்.
சிதம்பரம்,
தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீரமேஷ் ஆகியோரின் அறிமுக கூட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் பேசியதாவது:–
மத்தியில் மோடி அரசையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசையும் தோற்கடித்து, ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை தமிழக முதல்–அமைச்சராக்க வேண்டும். நாம் கொள்கை சார்ந்த கூட்டணி கட்சியினர் ஆவோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற பாடுபட வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியையும் அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்.
முதலில் தேர்தல் ஆணையத்திடம் வைர மோதிரம் சின்னம் கேட்டேன் கிடைக்கவில்லை, அடுத்து, பலாப்பழம் சின்னம் கேட்டேன் அதுவும் கிடைக்கவில்லை. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பானை சின்னம் கேளுங்கள் என்று என்னிடம் கூறினார். அதன்படி பானை சின்னத்தை நான் கேட்டேன். அதன்பிறகு தேர்தல் ஆணையம் எனக்கு பானை சின்னத்தை ஒதுக்கியதாக தகவல் வந்தது.
நம் கட்சி தொண்டர்கள் தொகுதி மக்களிடம் நேரில் சென்று பானை சின்னத்தை பிரபலப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்தால் அதனை நமது தொண்டர்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவும்.
இவ்வாறு அவர் பேசினார்.