நாடாளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈடுபடவுள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்களை துறை சார்ந்த பணிகளையும் ஆற்ற நிர்ப்பந்திக்க கூடாது


நாடாளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈடுபடவுள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்களை துறை சார்ந்த பணிகளையும் ஆற்ற நிர்ப்பந்திக்க கூடாது
x
தினத்தந்தி 23 March 2019 11:00 PM GMT (Updated: 23 March 2019 7:42 PM GMT)

நாடாளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈடுபடவுள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்களை, துறை சார்ந்த பணிகளையும் ஆற்ற நிர்ப்பந்திக்க கூடாது என்று சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் அந்த சங்கத்தின் சார்பில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு அந்த சங்கத்தின் மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அறப்பளி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் மருதமுத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தயாளன் தொடக்கவுரையாற்றினார். மாநில செயலாளர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராசு வேலை அறிக்கையை வாசித்தார். மாநில பொருளாளர் சலீம் சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். மாநில துணைத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் இளங்கோ ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்று வந்தவர்களை கவுரவித்து பாராட்டி பேசினார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், மாநில தேர்தல் ஆணையத்தின் இசைவு பெற்று, மார்ச்- ஏப்ரல் 2019-ல் ஓய்வுபெற உள்ள ஊழியர்களின் நலன் கருதி 1-10-2019-ம் தேதிய துணைப்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலை விரைந்து வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு துறையின் முதன்மை செய லாளர், பதிவாளர் ஆகியோரை கேட்டு கொள்ளப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக விகிதாச்சார முறையினால் பதவி உயர்வு இன்றி பணியாற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை 3) களை நிபந்தனைகளை தளர்த்தி உடனே அனைவரையும் இளநிலை ஆய்வாளர்களாக பதவி உயர்வு செய்திட வேண்டும்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துறை ஊழியர்களை, அப்பணிகளோடு சேர்த்து துறை சார்ந்த பணிகளையும் ஆற்றுமாறு நிர்ப்பந்தப்படுத்துவதை மண்டல இணைப்பதிவாளர்கள் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார். 

Next Story