வீட்டை விற்பதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி; ஒருவர் கைது


வீட்டை விற்பதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி; ஒருவர் கைது
x
தினத்தந்தி 23 March 2019 10:00 PM GMT (Updated: 23 March 2019 8:31 PM GMT)

வீட்டை விற்பதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக, தம்பதி உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

சிவகங்கை,

தேவகோட்டை ராம்நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 51), இவருடைய மனைவி சுசிலா (43). இவர்களது வீட்டை விற்பதாக கூறிவந்தனராம். மேலும் இவர்களுடன் விக்னேஷ் என்பவரும் சேர்ந்து வீடு விற்பனைக்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்தநிலையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த லட்சுமணன் (80) என்பவரிடம் வீடு விற்பது குறித்து பேசி உள்ளனர். இதற்காக கடந்த 26.10.2016–ல் லட்சுமணனிடம் வீட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்பதாக கூறினார்களாம்.

இதை நம்பிய லட்சுமணன் ரூ.28 லட்சத்தை 2 தவணைகளில் முன் பணமாக கொடுத்தாராம். தொடர்ந்து மீதி தொகையை பெற்று கொண்டு வீட்டை கிரையம் செய்து தருவதாக சுசிலாவும் அவருடைய கணவர் கருணாநிதி மற்றும் விக்னேஷ் ஆகியோர் கூறினராம்.

பின்னர் லட்சுமணன் பலமுறை முயற்சி செய்தும், சுசிலா வீட்டை கிரையம் செய்து தரவில்லையாம். மேலும் வாங்கிய பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லட்சுமணன் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனிடம் வீட்டை விற்பதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்ற பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் விசாரணை நடத்தி சுசிலா, கருணாநிதி மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கருணாநிதியை கைது செய்தார்.


Next Story