நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் துமகூரு தொகுதியில் தேவேகவுடா போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் துமகூரு தொகுதியில் தேவேகவுடா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.யும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரை சமாதானப்படுத்தும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
காங்கிரசுக்கு 20 தொகுதிகளும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹாசன் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா போட்டியிட்டு வந்தார். ஆனால் தற்போது அந்த தொகுதியில் தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட அவர் விட்டு கொடுத்துள்ளார்.
இதனால் அவர், பெங்களூரு வடக்கு அல்லது துமகூரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் நேற்று முன்தினம் இரவு தேவேகவுடாவும், முதல்-மந்திரி குமாரசாமியும் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது துமகூரு தொகுதியில் தேவேகவுடா போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று நேற்று தேவேகவுடாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறிதாவது:-
நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், துமகூரு தொகுதியும் ஒன்றாகும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இதற்காக வருகிற 25-ந் தேதி (அதாவது நாளை) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளிலும், எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
சிவமொக்கா, மண்டியா, ஹாசன், துமகூரு, உடுப்பி-சிக்கமகளூரு, உத்தர கன்னடா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு வடக்கு மற்றும் விஜயாப்புரா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் அந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். ஜனதாதளம்(எஸ்) கட்சியில் வேட்பாளர்கள் தேர்வில் எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
ஏற்கனவே ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சிவமொக்காவில் மதுபங்காரப்பா, மண்டியாவில் நிகில்குமாரசாமி, ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா, உடுப்பி-சிக்கமகளூருவில் பிரமோத் மத்வராஜ், உத்தரகன்னடாவில் அஸ்டினோகர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துமகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முத்த ஹனுமேகவுடா வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதால், முத்த ஹனுமேகவுடாவும், காங்கிரசாரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் முத்த ஹனுமே கவுடாவுக்கே மீண்டும் துமகூரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று காங்கிரசார் போர்க்கொடி தூக்கி வந்தனர். ஆனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேவேகவுடா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் துமகூரு மாவட்ட காங்கிரசாரும், முத்த ஹனுமே கவுடா எம்.பி.யும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ள முத்த ஹனுமேகவுடா போட்டியிட போவதாக நேற்று திடீரென்று அறிவித்துள்ளார். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக நேற்று காலையில் துமகூரு மாவட்டம் கெப்பூரு கிராமத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் துமகூரு காங்கிரஸ் பிரமுகர்களுடன் முத்த ஹனுமேகவுடா ஆலோசனை நடத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்றும், துமகூரு தொகுதியை எக்காரணத்தை கொண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் முத்த ஹனுமேகவுடாவிடம் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து, முத்த ஹனுமேகவுடா நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக துமகூரு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு வரை துமகூரு தொகுதியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளேன். ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமையும் போது, காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யாக இருப்பவர்களின் தொகுதிகள் விட்டு கொடுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.
இதனால் துமகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் துமகூரு தொகுதியை மட்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுத்து என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மற்ற தொகுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் விட்டு கொடுக்கவில்லை. துமகூரு தொகுதியை விட்டு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் என்னுடன் பேசவில்லை. அவர்களே தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்துள்ளனர்.
துமகூரு தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்களும், காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தினார்கள். அதனால் அந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். வேட்பு மனு தாக்கல் செய்ய 26-ந் தேதி தான் கடைசி நாளாகும். அதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி எனக்கு ‘பி’ பாரம் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தேவேகவுடாவுக்கு எதிராகவோ, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவோ நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன். வருகிற 25-ந் தேதி டவுன்ஹால் சர்க்கிளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். நான் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி வேட்பாளர் என்று கூறுவது தவறானது. ஒருவேளை எனக்கு காங்கிரஸ் சார்பில் ‘பி’ பாரம் கொடுக்கப்படவில்லை என்றால் நான் சுயேச்சையாக போட்டியிடுவேன்.
இவ்வாறு முத்தஹனுமே கவுடா எம்.பி. கூறினார்.
காங்கிரஸ் எம்.பி.யான முத்த ஹனுமேகவுடா துமகூரு தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து, முத்த ஹனுமேகவுடாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் இறங்கியுள்ளனர்.
இதுபற்றி தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ‘துமகூரு தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுத்திருப்பதால், அந்த மாவட்ட தலைவர்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். முத்த ஹனுமேகவுடாவுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. அவர் தேர்தலில் போட்டி யிடுவதில் இருந்து பின் வாங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது,’ என்றார்.
Related Tags :
Next Story