பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்தது குறித்து லோக்பால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - சித்தராமையா பேட்டி
பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்தது குறித்து லோக்பால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உப்பள்ளியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடியூரப்பா எழுதி வைத்திருந்த டைரியில் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி கொடுத்திருப்பது பகிரங்கமாகி உள்ளது. பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை என்று எடியூரப்பா கூறி வருகிறார். இந்த விவகாரத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். பா.ஜனதா தலைவர்களும் மறுத்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் யாரும் உண்மையை ஒத்து கொண்டது இல்லை. அந்த டைரியில் எடியூரப்பாவின் கையெழுத்து இருப்பது உண்மை.
பா.ஜனதாவினர் மறுப்பதால் அந்த டைரி உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்பதை கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டிய அவசியமானதாகும். அப்போது தான் உண்மை எது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த சம்பவம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இதன் மூலம் பா.ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்திருப்பது உண்மை என்று உறுதி செய்து கொள்ள முடிகிறது. அதனால் தான் பிரதமர் மவுனமாக இருந்து வருகிறார்.
எடியூரப்பா எழுதி வைத்திருந்த டைரியில் பா.ஜனதா தலைவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு தற்போது லோக்பால் அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த அமைப்பு மூலம் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி கொடுத்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். லோக்பால் விசாரணை நடத்தினால் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு உண்மையா?, பொய்யா? என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
தன் மீது கூறப்படும் எந்த ஒரு குற்றச்சாட்டையும் எடியூரப்பா ஒப்பு கொண்டதில்லை. ஜனதாதளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ. மகனிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட விவகாரத்தை மட்டும் அபூர்வமாக எடியூரப்பா ஒப்பு கொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் தயாராக உள்ளது. கூடிய விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story