திருவண்ணாமலையில் தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருவண்ணாமலையில் தி.மு.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 March 2019 5:00 AM IST (Updated: 24 March 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் தி.மு.க.அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு.க.வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க.தலைவர் கருணாநிதி 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தேர்தல்களில் நின்று தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.

ஒரு முறை கூட தோல்வியை பெறாத அவர் வெற்றி பெற்ற சின்னம் தான் உதயசூரியன். அந்த சின்னத்தில் உங்களிடத்தில் நான் வாக்கு சேகரிக்க வந்து உள்ளேன். திருவண்ணாமலை என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான இடமாகும்.

1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. களம்கண்டபோது 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் முதன்முதலாக நுழைந்தது. அதில் அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி போன்றோர் இடம் பெற்று இருந்தனர். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அப்போது தி.மு.க. சார்பில் நின்ற 2 பேர் வெற்றி பெற்றார்கள். ஈ.வி.கே.சம்பத், திருவண்ணாமலையை சேர்ந்த தருமலிங்கம் ஆகியோர்தான் அவர்கள்.

அப்படிப்பட்ட வரலாறு பெற்று இருக்கும் திருவண்ணாமலையில் நான் உங்களிடத்தில் வாக்கு சேகரிக்க வந்து உள்ளேன். 40 தொகுதியில் வெற்றி பெறும் தருணத்தில் திருவண்ணாமலையில் தான் அதிகமான அளவிற்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற போகிறோம் என்ற நம்பிக்கை உள்ளது.

40 நாடாளுமன்ற தொகுதிகள் மட்டுமின்றி 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கிறது. அந்த 18 தொகுதியிலும் வெற்றி பெற்று 100-க்கு 100 என்ற வெற்றி இலக்கை அடைய இருக்கிறோம்.

தலைவர் கருணாநிதி திருவாரூரையும், திருவண்ணாமலையையும் ஒரு போதும் பிரித்து பார்த்தது கிடையாது. ஏனென்றால் திருவாரூரை போல திருவண்ணாமலையும் தி.மு.க.வின் கோட்டை தான். 1967-ல் ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம் அமைத்த ஊர் தான் திருவண்ணாமலை என்று பெருமையோடு கூறுகிறேன்.

தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை எதிர்த்து நிற்க கூடிய ஆளுங்கட்சி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். பிரசாரம் தற்போது சூடுபிடித்து கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில், ஸ்டாலின் திமிராக பேசுகிறார் என்று கூறுகிறார். அது மட்டும் அல்ல. என் வளர்ப்பு சரியில்லை என்றும் கூறியுள்ளார். என் வளர்ப்பை பற்றி நாட்டுக்கே தெரியும். 15 வயதில் அரசியலுக்கு வந்தவன் நான்.

இன்று அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொல்லாத ஆட்சிக்கு உதாரணம் பொள்ளாச்சி. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போஸ் என்பவர் வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த தேர்தல் நடைபெற்ற நேரத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இடைத்தேர்தலின் போது அந்த கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. ஆனால் சின்னத்தை ஒதுக்கும் நேரத்தில் தலைவரோ, பொது செயலாளரோ படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவால் கையெழுத்து போட முடியாததால் கை ரேகை வைக்கப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பு வந்துள்ளது. அந்த கைரேகை ஜெயலலிதாவுடையது அல்ல என்று தீர்ப்பு வந்தது. இதை எப்படி தேர்தல் கமிஷன் அனுமதித்தது.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போதே ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்ற சந்தேகம் தற்போது வருகிறது. இதற்கு தொடர்ந்து முறையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். விசாரணை முறையாக நடைபெற வேண்டும்.

தொடர்ந்து நாங்கள் சொல்கிறோம். உயிரிழந்தது ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர். அதில் மர்மம் உள்ளது. இந்த சம்பவத்தை மூடி மறைக்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு திட்டங்களை தீட்டுகிறோம். மக்களுக்கு வேண்டிய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். மேலும் முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இதை கண்டுபிடித்து அதற்கு யார் உடந்தையாக இருந்தார்களோ அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம். அது மட்டுமின்றி இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேருக்கும் தண்டனை பெற்று தருவது தான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.

தேர்தல் அறிக்கையை நாம் தயாரித்து வெளியிட்ட போது சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தோம். இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. என்னவென்றால் இதில் அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இந்ததேர்தல் அறிக்கை பல்வேறு உறுதி மொழிகள் உள்ளது. இந்த உறுதி மொழி வெறும் தேர்தலுக்காக என நினைக்க கூடாது. நாங்கள் செல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம், வேலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், எ.வ.வே.கம்பன், கு.கருணாநிதி, சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பெ.சு.திருவேங்கடம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.குமார், பி.எஸ்.விஜயகுமார், நகர தலைவர் வெற்றிசெல்வன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆரணி டி.ராஜா, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்தையன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மு.மு.க., திராவிடர் கழகம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் நன்றி கூறினார்.

Next Story