உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 24 March 2019 7:05 AM GMT (Updated: 24 March 2019 7:05 AM GMT)

அவர் குள்ளமான உயரத்துடன், சுமாரான தோற்றம் கொண்டவர். வெகுகாலம் வெளிநாட்டில் வேலைபார்த்து பணம் சம்பாதித்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினார்.

வர் குள்ளமான உயரத்துடன், சுமாரான தோற்றம் கொண்டவர். வெகுகாலம் வெளிநாட்டில் வேலைபார்த்து பணம் சம்பாதித்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினார். சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடு செய்து கடை ஒன்றை தொடங்கி, அதில் கிடைத்த சுமாரான வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கும்போது கடும் உழைப்பாளியாக இருந்த அவரிடம், சொந்த ஊருக்கு வந்த பின்பு சோம்பேறித்தனமும், மது அருந்தும் பழக்கமும் சேர்ந்துகொண்டது. அவரது மனைவி திருமணமான புதிதில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்ததும், அவைகளை வளர்த்து பராமரிப்பதற்காக வேலையில் இருந்து விலகிவிட்டார்.

மகள்களில் மூத்தவள் தந்தையை போன்று சுமாரான தோற்றம் கொண்டவள். அவள் மீது அவர் அதிக பாசம் கொண்டிருந்தார். இரண்டாவது மகள் மிகுந்த அழகு கொண்டவள். பெரும்பாலும் தந்தை அவள் மீது வெறுப்பைக் காட்டுவார். அதற்கான காரணத்தை அவள் கேட்டதில்லை. அவர், இளைய மகளிடம் வெறுப்பைக்காட்டுவது தாய்க்கு வருத்தத்தை அளித்தது. மகள்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை பூர்த்திசெய்தார்கள்.

இந்த நிலையில் மூத்தமகளுக்கு தந்தை வரன் தேடினார். அவள் சுமாரான தோற்றம் கொண்டி ருந்ததால், இவர் எதிர்பார்த்ததுபோன்ற வசதியான வரன் அமையவில்லை. எப்படியாவது அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்பதற்காக, தனது தகுதியை மீறி சீர்வரிசை வழங்க அவர் தயாரானார். ஆடம்பரமாக திரு மணத்தை நடத்தவும் விரும்பினார். ஒருவழியாக அவர் எதிர்பார்த்தது போன்ற வரன் அமைந்தது. மாப்பிள்ளை வீட்டாரிடம் வாக்குகொடுத்ததுபோல் அதிக சீர்வரிசை வழங்குவதற்காக தனது கடையை விற்கவும் தயாரானார்.

அவரது அத்தகைய முயற்சிக்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்தார். ‘இளைய மகளின் திருமணத்திற்கும் பணம் தேவை. நம் இருவருக்கும் வயதாகிவிட்டது. நமது எதிர்காலத்திற்கும் பணம் தேவை. அதனால் வாழ்வாதாரமாக இருக்கும் கடையை விற்று மூத்தமகளுக்கு திருமணம் செய்துவைத்துவிடவேண்டாம். நமது பொருளாதார தகுதிக்கு ஏற்றதுபோல் வேறு வரன் பார்க்கலாம்’ என்றார். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடையை விற்பதிலேயே குறியாக இருந்தார்.

இந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்ததும் அவர்கள் புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்தி, சீர்வரிசைக்கு பதில் கடையை எழுதிவாங்கிக்கொண்டார்கள். எழுதிவாங்கிவிட்டாலும், கடையை அவரே தொடர்ந்து நடத்தலாம் என்றார்கள். கல்யாணம் ஆடம்பரமாக நடந்தது. தந்தையின் கையில் இருந்த பணமெல்லாம் கரைந்தது.

இந்தநிலையில் இளையமகள், அந்த பகுதியில் உள்ள இளைஞன் ஒருவனை காதலித்தாள். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். அந்த இளைஞன் நல்ல குணங்களை கொண்டவன். சுயதொழில் செய்து சம்பாதித்துக்கொண்டும் இருந்தான்.

மகளது காதல் பற்றிய தகவல் தந்தையின் காது களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. அப்போது அவர் அதிரடியாக தனது கொடூர முகத்தைக்காட்டினார். ‘அவள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். எனக்கு அவளது திருமணத்தில் எந்த சம்பந்தமும் இருக்காது. நான் ஒரு ரூபாய்கூட அவள் திருமணத்திற்கு என் கையில் இருந்து தரமாட்டேன். இவளுக்கு எதையுமே கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான், கடையைகூட மூத்தமகளுக்கு எழுதிக்கொடுத்துவிட்டேன்’ என்றார்.

‘இளைய மகள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?’ என்று தாய் கேட்டதற்கு, அவளே தலைகுனிந்து போகும் அளவுக்கு ‘அவள் எனக்கு பிறந்தவள் இல்லை’ என்றார். ‘இத்தனை வருடங்களாக கணவருக்கு தன் நடத்தைமீது சந்தேகம் ஏற்பட்டிருந்திருக்கிறதே!’ என்று அவள் மனதொடிந்து போனாள்.

இளைய மகளை காதலித்த இளைஞனிடம் இந்த விஷயத்தை அந்த பெண்மணி நேரடியாக சொல்லாமல், பணக்கஷ்டம் இருப்பதாக கூறினாள். அதன் பிறகு அந்த இளைஞனே திருமண செலவுகளையும் செய்து, அவளை திருமணம் செய்துகொண்டான். அதில் அவளது சந்தேக தந்தை கலந்துகொள்ளவில்லை.

இளையமகளுக்கு திருமணமான இரண்டே வருடத்தில், அவளது தந்தையின் வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது. மூத்த மருமகன், அந்த கடையில் இருந்து அவரை வெளியேற்றிவிட்டான். அதற்கு மூத்த மகளே உடந்தையாகவும் இருந்தாள். அதனால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவியும் இறந்துபோனார்.

நாளடைவில் அவரும் நோய்வாய்ப்பட்டார். அவரை கவனிக்கவும், அவரது மருத்துவ செலவுகளை ஈடுசெய்யவும் ஆள் இல்லை. அதனால் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்த அவரை, இளைய மகள் அழைத்துச்சென்று, தன்னோடு வைத்து பராமரித்துக்கொண்டிருக்கிறாள். கூனிக் குறுகிப்போய் அவர் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

வாழ்க்கை ஒருபுதிர். அதில் எப்போது வேண்டுமானாலும் எந்த மாதிரியான திருப்பமும் வரலாம் என்பதை நினைவில்வைத்துக்கொண்டுதான் அனைவரும் பேசவும், செயல்படவும் வேண்டும்!

- உஷாரு வரும்.

Next Story