ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பணம் வசூல் ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார்


ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய பணம் வசூல் ஊழியர்கள் மீது பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 24 March 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. ஓசூர் சுற்று வட்டாரத்தில் இயற்கைக்கு மாறாக உயிர் இழப்பு ஏற்படுபவர்களின் உடல்களை போலீசார் மீட்டு இங்கு கொண்டு வருகிறார்கள். பின்னர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்கொலை, கொலை, நீரில் மூழ்கி இறந்தவர்கள், ரெயிலில் அடிபட்டு இறந்தவர்கள், விபத்தில் இறந்தவர் உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யும் ஒவ்வொரு இறந்தவர்கள் உடல்களின் உறவினர்களிடம் அங்கிருக்கும் ஊழியர்கள் கட்டாயமாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும், அதை துணி வைத்து சுற்றி கட்டுவதற்கு, மேலும் சில பொருட்கள் வாங்க என்று ஒவ்வொரு உடல்களுக்கும் தலா ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரையில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் ஓசூர் அருகே நீரில் மூழ்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 குழந்தைகள் இறந்துள்ளனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஓசூர் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் சிலர் ரூ.4,500 பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

3 குழந்தைகளின் மரணத்தால் கண்ணீர் விட்டு கதறி அழுத அவர்களின் பெற்றோரிடம் பணம் கேட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூட ஊழியர்கள் சிலர் தொந்தரவு செய்தது அங்கிருந்த பொதுமக்கள் சிலரை முகம் சுளிக்க வைத்தது. இது போன்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story