மாவட்டத்தில் 7,916 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்


மாவட்டத்தில் 7,916 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 5:11 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 7,916 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1,720 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் தலைமையில் மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்தும், ‘விவிபேட்’ எந்திரம் குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு அன்று செய்ய வேண்டியவை குறித்து விளக்கம் அளித்தனர்.

இதேபோல் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1,128 பேருக்கு பரமத்தி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,633 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1,633 பேருக்கு திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 911 பேருக்கு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் மாதிரி வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டியவை மற்றும் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்குவது, வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல் திருச்செங்கோடு சண்முகா என்ஜினீயரிங் கல்லூரியில் சங்ககிரி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது, ‘நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 7,916 பேருக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது’ என்றார்.

இதேபோல் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1,300 பேருக்கு பயிற்சி வகுப்பு ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் 1,224 பேருக்கு சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

Next Story