நன்செய் இடையாறில் இன்று மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பு


நன்செய் இடையாறில் இன்று மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா ஆடு, கோழிகள் விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 March 2019 4:15 AM IST (Updated: 24 March 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா இன்று நடப்பதையொட்டி, பரமத்திவேலூர் கோழி சந்தையில் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை அதிகரித்துள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளது.

பரமத்தி வேலூர், 

பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிக நீளமான பூக்குண்டம் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பூக்குண்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள கிடா வெட்டும் நிகழ்ச்சிக்காக, பரமத்திவேலூரில் உள்ள கோழி சந்தைக்கு சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. விலை அதிகமாக இருந்தாலும் திருவிழாவை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் விலை கொடுத்து ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

இதே போல் நாட்டுக்கோழி ஏலச்சந்தைக்கு நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ரூ.300 முதல் ரூ.350 வரையில் நாட்டுக்கோழிகள் விற்பனையானது. மேலும் புதிதாக கோழிச்சந்தைக்கு புறாக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஒரு ஜோடி புறாக்கள் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையானது.

வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலை மற்றும் நாமக்கல்லில் இருந்து வேலூர் பஸ்நிலையம் செல்லும் சாலையில் இந்த இரு சந்தைகள் நடைபெற்றது. இதில் ஆடு, கோழிகள் விற்பனை களை கட்டியது. ஆடு மற்றும் கோழிகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் நேற்று காலையில் இந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story