விபத்தில் விவசாயி கால்கள் முறிந்தன: தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


விபத்தில் விவசாயி கால்கள் முறிந்தன: தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2019 3:30 AM IST (Updated: 24 March 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் விவசாயி கால்கள் முறிந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் மாவத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரையிலிருந்து போச்சம்பள்ளிக்கு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் அப்புநகர் என்னும் இடத்தில் முருகேசன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் முருகேசனுக்கு 2 கால்களும் முறிந்தன. இந்த விபத்தை தொடர்ந்து டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அந்த பகுதியில் தனியார் பஸ் எப்போதும் அதிவேகமாக செல்கிறது. இது குறித்து தாங்கள் பல முறை கூறியும் டிரைவர் அப்படியே பஸ்சை ஓட்டி வருவதாக புகார் கூறிய பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்த முருகேசன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story