வாகனங்களுக்கு அ.தி.மு.க.வினர் பெட்ரோல் நிரப்ப வைத்திருந்த 100 டோக்கன்கள் பறிமுதல்


வாகனங்களுக்கு அ.தி.மு.க.வினர் பெட்ரோல் நிரப்ப வைத்திருந்த 100 டோக்கன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2019 11:15 PM GMT (Updated: 24 March 2019 6:38 PM GMT)

சீர்காழியில் வாகனங்களுக்கு அ.தி.மு.க.வினர் பெட்ரோல் நிரப்ப வைத்திருந்த 100 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்கள் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யப்பட்டது.

சீர்காழி,

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து பாரதி எம்.எல்.ஏ. பா.ம.க. மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜலபதி, த.மா.கா. மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நற்குணன், ராஜமாணிக்கம், நகர செயலாளர் பக்கிரி ஆகியோர் பிரசாரத்தை தொடங்க சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் கூடி இருந்தனர். இவர்களுடன் கோவிலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினரும் இருந்தனர்.

இந்தநிலையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை மையத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் தங்கள் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப மஞ்சள், பச்சை நிற அட்டைகளை டோக்கனாக கொடுத்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தனர்.

இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்தனர். உடனே அதிகாரிகள் அ.தி.மு.க.வினரை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த 100 டோக்கன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த பெட்ரோல் விற்பனை மைய மேலாளர்கள் தங்கராசு, தினேஷ் ஆகியோரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் சீர்காழி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வைத்திருந்த டோக்கன்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story