பெங்களூருவில் சம்பவம் 2½ வயது குழந்தையை கொன்று பெண் தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை


பெங்களூருவில் சம்பவம் 2½ வயது குழந்தையை கொன்று பெண் தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 2½ வயது குழந்தையை கொன்றுவிட்டு, பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகரபாவி அருகே கல்யாண்நகர் 14-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சந்தோஷ் ஷெட்டி. இவரது மனைவி பிரதிமா(வயது 28). இந்த தம்பதிக்கு 2½ வயதில் சாத்விக் என்ற குழந்தை இருந்தது. கலால்துறையில் ஊழியராக சந்தோஷ் ஷெட்டி வேைல பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த பிரதிமா தனது குழந்தை சாத்விக்கை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவில் சந்தோஷ் ஷெட்டி வீட்டுக்கு வந்தார். அப்போது தனது மனைவி, குழந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுபற்றி சந்திரா லே-அவுட் போலீசாருக்கு, சந்ேதாஷ் ஷெட்டி தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து தாய், குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது குழந்தையை கொலை செய்துவிட்டு, பிரதிமா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், வாழ்க்கையில் விரக்தி அடைந்த காரணத்தால் குழந்தையை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்து கொள்வதாகவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் குழந்தையை கொன்றுவிட்டு, பிரதிமா தற்கொலை செய்ததற்கான சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ் ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story