பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1½ லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 7:41 PM GMT)

அறந்தாங்கி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய அலுவலக கண்ணாடியை உடைத்து, ரூ. 1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டையை அடுத்துள்ள பட்டுக் கோட்டை-அறந்தாங்கி சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பெட்ரோல் விற்பனையான ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை, அதன் அலுவலக அறையில் வைத்து பூட்டி விட்டு பணி யாளர்கள் அருகே உள்ள அறைக்கு தூங்க சென்று விட்டனர்.

அப்போது கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு பணியாளர்கள் எழுந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது, அங்கு கண்ணாடி உடைந்து கிடந்தது.

அதேநேரத்தில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்றனர். பின்னர் பணியாளர்கள் அலுவலகத்திற்கு உள்ளே சென்று பார்த்த போது மேஜை “டிராயரில்” வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை. அதனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

இது குறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலைய அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்களின் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சுப்பிரமணியன் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story