ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.க்கு ‘சீட்’ மறுப்பு: சிவசேனா தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.க்கு ‘சீட்’ மறுப்பு: சிவசேனா தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 March 2019 10:30 PM GMT (Updated: 24 March 2019 7:45 PM GMT)

ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.க்கு நாடாளுமன்ற தேர்தலில் ‘சீட்’ கொடுக்காத விரக்தியில் சிவசேனா தொண்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியது.

மும்பை, 

உஸ்மனாபாத் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சிவசேனாவின் ரவீந்திர கெய்க்வாட். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்தபோது, அவருக்கு சாதாரண இருக்கை ஒதுக்கியதால் டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் தாக்கி சர்ச்சையில் சிக்கினார்.

இந்தநிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சிவசேனா போட்டியிட வாய்ப்பு மறுத்துவிட்டது. உஸ்மனாபாத் தொகுதி வேட்பாளராக ஓம்ராஜே நிம்பல்கர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் உமர்காவில் சிவசேனா கட்சி கூட்டம் நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபா போஸ்லே என்பவரும் கலந்துகொண்டு இருந்தார். அப்போது, அவர் ரவீந்திர கெய்க்வாட்டுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கப்படாததை கண்டித்து திடீரென கோஷம் எழுப்பினார்.

மேலும் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொள்ள முயன்றார். இதை பார்த்து அங்கிருந்த சிவசேனாவினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து அவரை பிடித்து கொண்டனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.க்கு ‘சீட்’ கொடுக்காத விரக்தியில் சிவசேனா தொண்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story