திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன


திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாசில்தார் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதுபோல், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலான விவி பேட் என்ற எந்திரம் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று காலை நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இதை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தேர்தலுக்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 497 வாக்குச்சாவடிகளுக்கும், 2 ஆயிரத்து 976 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 3 ஆயிரத்து 75 விவி பேட் எந்திரங்களும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த தொகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட உள்ளது. இந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் இந்த அறைகள் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்–கலெக்டர் பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி கமி‌ஷனர் சிவகுமார், உதவி தேர்தல் அலுவலர்கள் முருகன், சக்திவேல், அசோகன், செண்பகவள்ளி, சாகுல்ஹமீது, மகாராஜ், தேர்தல் சிறப்பு தாசில்தார் முருகதாஸ் உள்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story