மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து அரசு ஊழியர்கள்– ஆசிரியர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து அரசு ஊழியர்கள்– ஆசிரியர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 March 2019 10:45 PM GMT (Updated: 24 March 2019 8:01 PM GMT)

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்த முதல் கட்ட பயிற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.

முத்தூர்,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதன்படி இந்த 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந்தேதி பொது தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களில் தலைமை தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணிக்குழுவினர்களாக பணிபுரிய உள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பன்னீர்செல்வம் பார்க் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டல் வேளாளர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது பற்றிய முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்று காலை நடைபெற்றது. இதனை ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சி.கதிரவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு எந்திரங்களை கவனமாகவும், பாதுகாப்பாகவும் இயக்குவது குறித்தும், கையாளும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நேரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானால் உடனடியாக மாற்று எந்திரங்களை பயன்படுத்தி வாக்குப்பதிவை தொடர்ந்து சீராக நடத்தும் வழிமுறைகள் பற்றியும் மண்டல தேர்தல் அதிகாரிகள் குழுவினர் பயிற்சி அளித்தனர்.

இந்த பயிற்சியின் போது ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, மாநகராட்சி ஆணையர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் அரசு வருவாய்த்துறை, கல்வித்துறை, மாநகராட்சி உட்பட அனைத்து துறை அதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.


Next Story