சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 24 March 2019 11:00 PM GMT (Updated: 24 March 2019 8:24 PM GMT)

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சாத்தூர்,

சாத்தூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து சாத்தூர் ஆலங்குளத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளாவாய்சுந்தரம் முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பான ஆட்சியை செய்து வருகின்றனர். இந்தியாவில் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலுக்கு பின்பு நரேந்திரமோடி ஒரு இரும்பு மனிதராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் முதல்–அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் எதற்கு வந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். உங்களது உழைப்பை, ரத்தத்தை, வேர்வையை சிந்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் வாக்களித்த வாக்காளர்களுக்கும், வாக்கு சேகரித்த கட்சி நிர்வாகிகளுக்கும் துரோகம் செய்து அந்த எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விட்டனர். 7 மாதம் மட்டும் எம்.எல்.ஏ.வாக பணியாற்றிவிட்டு 25 கோடி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்கள். கிடைத்த விலைக்கு எம்.எல்.ஏ பதவியை விற்ற நபர்களுக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் ஒரு நல்ல விலை கிடைத்தால் விற்றுவிடுவார்கள்.

7 மாதம் எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் தொகுதியில் ஏதாவது ஒரு கழிப்பறை கூட கட்டிக்கொடுக்கவில்லை. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நடைபெறும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சந்திரபிரபா எம்.எல்.ஏ, ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story