உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த டாஸ்மாக் கடை பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர்


உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த டாஸ்மாக் கடை பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர்
x
தினத்தந்தி 25 March 2019 3:45 AM IST (Updated: 25 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இல்லாமல் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கொண்டு வந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாகனச் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களை காண்பித்தால் மட்டும் பணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கீழமேல்குடி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் முத்துகுமார் கடை வசூல் பணம் 69 ஆயிரத்து 640 ரூபாயுடன் வீட்டிற்கு சென்றார்.

அப்போது நல்லாண்டிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது முத்துக்குமாரிடம் உள்ள பணம் குறித்து கேட்டனர். அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து தனது பணி செய்யும் அடையாள அட்டையை காட்டிய போதும் அவர்கள் நடவடிக்கையை மேற்கொண்டனராம்.

இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் தரப்பில் கூறியதாவது, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளன. இரவு 10 மணி வரை விற்பனை இருக்கும் கடைகளில் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து தினசரி ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் விற்பனை இருக்கும். விற்பனை குறித்த நோட்டு கடையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். பணத்தை பாதுகாப்பு கருதி வீட்டிற்கு எடுத்து சென்று மறுநாள் வங்கியில் செலுத்துவோம்.

தேர்தல் காரணமாக அதிகாரிகள் சோதனையின் போது ஆவணங்கள இல்லை என பணத்தை பறிமுதல் செய்கின்றனர். கடையில் உள்ள சரக்கு நோட்டை வீட்டிற்கு எடுத்து சென்றால், உயர் அதிகாரிகள் எங்களுக்கு தண்டனை வழங்குகின்றனர். இதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆவணங்களுடன் சென்று மறுநாள் பணத்தை பெற அலைய வேண்டியுள்ளது. எனவே உயர் அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story