சமூக வலைதளங்களில் தி.மு.க. பொய் பிரசாரம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
சமூக வலைதளங்களில் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு வேட்பாளர் சி.மகேந்திரனை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது கூட்டணி அற்புதமான கூட்டணியாகும். நமது கூட்டணி பற்றி ஸ்டாலின் கேலி பேசுகிறார். வைகோ உங்களைப்பற்றி கேவலமாகப் பேச வில்லையா?. தி.மு.க.வின் இயலாமை காரணமாக பொய் பிரசாரம் செய்கிறது. தொடர்ந்து தி.மு.க. சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகிறது. பொய் பிரசாரம் செய்வது தி.மு.க.விற்கு கை வந்த கலை. தி.மு.க. வெற்றி பெற்றால் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு அதிகரிக்கும். தி.மு.க. கட்சிக்குத்தான் ஸ்டாலின் தலைவர்.
ஆனால் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சியை குறை சொல்ல முடியவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகத்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறு துணையாக இருக்கும். சிறு பான்மையினருக்கு பாதுகாப்பு தருவதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கையில் இருந்து மாற மாட்டோம். ஆனைமலை ஆறு, நல்லாறு அணை திட்டம் நிறைவேற்ற முதல்-அமைச்சர் கமிட்டி அமைந்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன.
அரசின் ஒவ்வொரு திட்டமும் அனைத்து மக்களுக்கும் சென்றிருக்கிறது. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.மகேந்திரனை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் பேசுகையில் எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினை பார்த்து நான் அமர்ந்த முதல்-அமைச்சர் நாற்காலியில் உங்களை (ஸ்டாலின்) அமர விடமாட்டேன் என்று சபதமிட்டார். அவர் இறந்த பிறகு முதல் முறையாக ஒரு தேர்தலைச் சந்திக்கிறோம்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றும் கடமை நமக்கு உண்டு.
கருணாநிதியின் குடும்பமே ஊழல் நிறைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது தி.மு.க. பொய் வழக்குப் போட்டு மரண படுக்கைக்கு அனுப்பியது. காங்கிரஸ் அதற்கு துணை நின்றது. 130 கோடி மக்களின் தலைவரை (பிரதமர்) தேர்ந்தெடுக்க அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.மகேந்திரன், மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் விஜயகுமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஏ.சக்திவேல், தாமோதரன், தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தினகரன், மற்றும் பா.ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொள்ளாச்சி காந்தி சிலை அருகே வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story