கோத்தகிரி அருகே, காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் - விவசாயிகள் கவலை
கோத்தகிரி அருகே காய்கறி தோட்டங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, காலிபிளவர், முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், நூல்கோல், பீன்ஸ் உள்ளிட்ட சாகுபடிக்கு மாறிவிட்டனர். மேலும் ஏற்றுமதி செய்யக்கூடிய சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு உள்ளனர். இந்த காய்கறி விவசாயம் மூலம் கணிசமான லாபம் விவசாயிகளுக்கு கிடைத்து வருகிறது. இருப்பினும் உரம் மற்றும் விதை விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை மட்டுமின்றி வனவிலங்குகள் அட்டகாசம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பெரும்பாலும் காய்கறி விவசாயம் செய்யப்படும் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை பகுதியில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளது. இந்த காட்டுயானைகள் காய்கறி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் பகல் நேரங்களிலும் காட்டுயானைகள் தோட்டங்களில் சுற்றித்திரிவதால் விவசாய தொழிலாளர்களை அவை தாக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சங்க செயலாளர் சிராங்கி கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக கூக்கல்தொரையில் 5 காட்டுயானைகளை கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. அவை வாழை மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் அவ்வப்போது புகுந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் பயிர்களை நாசப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். எனவே அந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story