குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் ‘நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’ - தாந்தநாடு கிராம மக்கள் ஆவேசம்
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், ‘நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்‘ என்று தாந்தநாடு கிராம மக்கள் ஆவேசமாக கூறினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட தாந்தநாடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஓரசோலையில் செல்லும் நீரோடைக்கு அருகில் ஒரு தாழ்வான இடத்தில் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து மின் மோட்டார் மூலம் தாந்தநாடு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அந்த கிணறு வறண்டு தாந்தநாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
நீரோடையில் தடுப்பணை கட்டி அங்கிருந்து பிற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுவதும், நீரோடையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளதும் தான் இதற்கு காரணம் என்று தாந்தநாடு கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் நீரோடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை இடித்து அகற்றி, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர். இது தவிர கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இதையடுத்து குன்னூர் ஆர்.டி.ஓ., கோத்தகிரி தாசில்தார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, தடுப்பணையை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் நீரோடை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நில அளவை செய்யும் உத்தரவிடப்பட்டது. பின்னர் தடுப்பணையும் உடனடியாக இடித்து அகற்றப்பட்டது. ஆனால் நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி தாந்தநாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை தாந்தநாடு கிராம நுழைவு பகுதியில் தலைவர் பீமராஜ் தலைமையில் மக்கள் கூடினர். பின்னர் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தாந்தநாடு கிராம மக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடிநீர் தட்டுப்படு காரணமாக கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே உடனடியாக நில அளவை செய்து, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து தாந்தநாடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு தீர்வு காணாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.
Related Tags :
Next Story