அடுத்த தலைமுறைக்கான திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


அடுத்த தலைமுறைக்கான திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த தலைமுறைக்கான வாழ்வாதார திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குளச்சல்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குளச்சலில் நடந்தது. பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை தாங்கினார். இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாடாளுமன்ற தேர்தல், கடந்த 5 ஆண்டு கால வளர்ச்சி பணிகள் தொடர வேண்டுமா? அல்லது முடிவாக வேண்டுமா? என தீர்மானிக்கும். எனவே குமரி மாவட்ட மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி சாலை மேம்பாடு அடைவதை பொருத்து அமையும். எனவே தான் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 4 வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.

கடந்த 2003-ம் ஆண்டு நான் மந்திரியாக இருக்கும் போது கொண்டு வந்த திட்டங்களை, அதற்கு பின்னர் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுத்தவில்லை. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நான் பதவிக்கு வந்த பின் வளர்ச்சி திட்டங்களை 6 எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கின்றனர். வழக்கு தொடரப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் பணி நடக்காமல் செய்தனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தை எதிர்த்து 7 வழக்குகள் போடப்பட்டன. குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து சட்டசபையில் 6 எம்.எல்.ஏ.க்கள் பேசியது உண்டா?, அவர்கள் பணியையும் நான் செய்கிறேன். இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. வீட்டில் குருவி கட்டும் கூட்டினை கலைக்க கூடாது என்பது எங்கள் சித்தாந்தம். அதுபோல் தான் குமரி வர்த்தக துறைமுகத்தால் மீனவர்களின் வீடுகள் பாதிக்காது.

50 ஆண்டு கால வளர்ச்சி பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் முடிந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்த தலைமுறைக்கான வாழ்வதார திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வெளிநாடுகளில் சிறை பிடிக்கப்பட்ட 393 மீனவர்களை நாங்கள் மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசுகையில், மோடி மீண்டும் பிரதமராக இங்கு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அவர் கடந்த முறை வெற்றி பெறாவிட்டால், நாகர்கோவிலில் 100 ஆண்டுகள் ஆனாலும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டிருக்காது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியினர் மத அடிப்படையில் வாக்குகள் கேட்கின்றனர். நாம் அப்படி வாக்கு கேட்க வேண்டாம். நம் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் 5 ஆண்டு கால சாதனைகளை கூறினாலே போதும். மோடி தான் மீண்டும் பிரதமராக தகுதி பெற்றவர் என்று தெரிவித்தார்.

இதில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் முத்து கிருஷ்ணன், துணைத் தலைவர் ப.ரமேஷ், மாவட்ட மகளிர் அணி முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் செயலாளர் சிவசெல்வராஜன், பொருளாளர் திலக், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.எம்.பிள்ளை, கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் டி.ஆர்.செல்வம், தே.மு.தி.க. செயலாளர்கள் அமுதன், ஜகன்னாதன், பொருளாளர் ஜெயசந்திரன், நகர அ.தி.மு.க. செயலாளர் ஆண்ட்ரோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர பா.ஜ.க. தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சாமிதோப்பு தலைமைப்பதிக்கு சென்று தரிசனம் செய்தார். அவரை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். இதற்கிடையே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அகில பாரத இந்து மகா சபா ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள அகில பாரத இந்து மகா சபா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியனை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

Next Story