நண்பரின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை


நண்பரின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 25 March 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் நண்பரின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் கழுத்து மற்றும் மர்ம உறுப்பை அறுத்து பெண்ணின் உறவினர்கள் கொலை செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டில் நண்பரின் காதல் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த வாலிபரின் கழுத்து மற்றும் மர்ம உறுப்பை அறுத்து பெண்ணின் உறவினர்கள் கொலை செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சூர்யா (வயது 23). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சூர்யாவுக்கு காயத்ரி என்ற 5 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார்.

இந்நிலையில் நேற்று மேலேரிபாக்கம் ஏரியில் சூர்யா மர்ம நபர்களால் சரமாரியாக கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணையே கரம் பிடிக்கவும் ஆசைப்பட்டார். ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கார்த்திக் தனது நண்பரான சூர்யாவின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து, சூர்யா சில நண்பர்களுடன் சேர்ந்து கோவிலில் காதல் ஜோடிக்கு ரகசிய திருமணம் செய்துவைத்தார். இந்த சம்பவம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததையடுத்து சூர்யா மீது கடும் கோபத்தில் இருந்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

மேலும் இதற்கான நேரத்தையும் எதிர்நோக்கி கொண்டிருந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு சூர்யாவுக்கு மது விருந்து வைப்பதாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதை நம்பி சூர்யாவும் அவர்களுடன் சென்றதாக தெரிகிறது. அப்போது சூர்யாவுக்கு போதை தலைக்கேறியவுடன் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சூர்யாவின் கழுத்து மற்றும் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து மேலேரிப்பாக்கம் ஏரிக்கரையில் தூக்கி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார் கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story