திருவையாறு அருகே வாலிபர், அரிவாளால் வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவையாறு அருகே வாலிபர், அரிவாளால் வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 26 March 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நாகத்தி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கண்ணன்(வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கருவேல மரங்களை வெட்டி கரி தயாரித்து, ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று திருவையாறு அருகே உள்ள ராஜேந்திரன் ஆற்காடு பகுதியில் ஒரு கருவேலங்காட்டில் கண்ணன் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய உடலில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணன், மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் கண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story