தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு புரளியால் பெரும் பரபரப்பு


தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு புரளியால் பெரும் பரபரப்பு
x
தினத்தந்தி 26 March 2019 4:30 AM IST (Updated: 26 March 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு புரளியால் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ளது அரசு மருத்துவக்கல்லூரி. இந்த கல்லூரி வளாகத்தில் மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் 4 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் 3-வது நுழைவு வாயில் அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் மர்ம பொருள் ஒன்று வெடிகுண்டு போல கிடந்தது.

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த பொருள், பச்சை நிற சணலால் சுற்றப்பட்ட ஒரு வெடிகுண்டு போல காணப்பட்டது. இதனால் அது வெடிகுண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தஞ்சையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு கிடந்த பொருளை எடுத்து சோதனை செய்தபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும், தெர்மாகோல் அட்டைகளை அடுக்கி அதன் மீது பச்சை நிற சணலால் சுற்றப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. வெடிகுண்டு போல காணப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு தஞ்சை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாது அருகில் உள்ள திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று வெடிகுண்டு பீதி காணப்பட்டதால் மருத்துவ கல்லூரி வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பெரும் பரபரப்பு நிலவியது.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பின்னர் அது வெடிகுண்டு அல்ல என தெரிய வந்தது. அதன் பின்னரே நோயாளிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால்

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் போலீசார் கவனத்தை திசை திருப்பும் வகையில் வெடிகுண்டு புரளி ஏற்படுத்தும் நோக்கில் மர்ம நபர்கள் இதனை போட்டு விட்டு சென்றனரா, அல்லது வேண்டுமென்றே இது போன்ற செயலில் யாராவது ஈடுபட்டார்களா? என்பது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story