நல்லம்பள்ளிக்கு பன்னாட்டு தொழிற்சாலைகளை கொண்டு வருவோம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
நல்லம்பள்ளிக்கு பன்னாட்டு தொழிற்சாலைகளை கொண்டு வருவோம் என்று பிரசார கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களான கொல்லப்பட்டி, பெரியூர், பிக்கிலி, புதுக்கரம்பு, திருமல்வாடி, பாப்பாரப்பட்டி, ஆலமரத்துபட்டி உள்ளிட்ட 22 கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். பென்னாகரம் தொகுதி பா.ம.க. செயலாளர் சுதாகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த பிரசார கூட்டங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-
பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் வலிமையான ஆட்சியை மீண்டும் கொண்டு வர தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இமாலய வெற்றி பெறும். எங்கள் கூட்டணியை பற்றி தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை கூறினாலும் இந்த கூட்டணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பற்றியும், டாக்டர் ராமதாசை பற்றியும் விமர்சித்து பேசி வருகிறார். இந்த விமர்சனங்களை மக்கள் புறக்கணிப்பார்கள். தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நல்லம்பள்ளி தாலுகாவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. நல்லம்பள்ளிக்கு பன்னாட்டு தொழிற்சாலைகளை கொண்டு வருவோம்.
தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக பெரும்பாலான விவசாய பணிகளுக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து உபரிநீரை நீரேற்றம் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார். இதுபோன்ற நல்ல திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்திட எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்லாதரவு தர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
Related Tags :
Next Story