அ.ம.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து: வாலிபர்கள் 2 பேர் கைது முன்விரோதம் காரணம்


அ.ம.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து: வாலிபர்கள் 2 பேர் கைது முன்விரோதம் காரணம்
x
தினத்தந்தி 26 March 2019 4:45 AM IST (Updated: 26 March 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அ.ம.மு.க. பிரமுகரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் பழனிசாமி என்கிற ரமேஷ்(வயது 45). இவர் அந்த பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். அ.ம.மு.க. மாவட்ட தலைவராக உள்ளார். இவருடைய நண்பர்கள் சுரேஷ், சிலம்பரசன், கார்த்திக். இவர்கள் ரமேசுக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூர் ராதாநகரை சேர்ந்த சதீஷ்பாண்டியன்(31) மற்றும் அவருடைய பெரியம்மா மகனான கோல்டன் நகரை சேர்ந்த கணேஷ்பாண்டியன் ஆகியோருக்கும், சிலம்பரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிலம்பரசனை கணேஷ்பாண்டியன், சதீஷ்பாண்டியன் ஆகிய 2 பேர் தாக்கியதாக திருப்பூர் வடக்கு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேரும் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சின்னபொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் தரப்புக்கும் கணேஷ்பாண்டியன் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கணேஷ்பாண்டியனும் அவருடைய நண்பரும் காட்டன்மில் ரோட்டில் நின்றபோது அங்கு சுரேஷ் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

கணேஷ்பாண்டியன் கட்டையால் சுரேஷின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ், தான் வைத்திருந்த கத்தியால் கணேஷ்பாண்டியனை குத்தியதாக கூறப்படுகிறது. மாறி, மாறி தாக்கிக்கொண்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார், இருவர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனது அண்ணன் கணேஷ்பாண்டியன் தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட சதீஷ்பாண்டியன் தனது நண்பரான கோல்டன் நகரை சேர்ந்த கார்த்திக்கை(28) அழைத்துக்கொண்டு இரவு சுரேசை தேடி ரமேஷின் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ரமேசுக்கும், சதீஷ்பாண்டியனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சதீஷ்பாண்டியன், சுரேசுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி ரமேசை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியதாக தெரிகிறது. இதில் கால், கை ஆகியவற்றில் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட ரமேசை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே பாரதிநகர் தாயம்மாள் லே–அவுட் பகுதியில் ஒரு வீட்டுக்குள் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் புகுந்த சதீஷ்பாண்டியனை அங்கிருந்தவர்கள் பிடித்து வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் விசாரணை நடத்தியபோது முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்பாண்டியன், அவருடைய நண்பரான கார்த்திக் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தார்.


Next Story