பல்லடம் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
பல்லடம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலியானான். நண்பர்களுடன் குளிக்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.
பல்லடம்,
திருப்பூர் சாமுண்டிபுரம் சாய்பாபா நகரை சேர்ந்தவர் பூவண்ணன். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுடைய மகன் பாலச்சந்தர் (19). இவர் பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு பாலச்சந்தர் சென்றார். பின்னர் மதியம் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 4 பேருடன் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். 70 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அப்போது கிணற்றில் டைவ் அடித்து குளிப்பதற்காக கிணற்றின் சுவரில் ஏறி நின்றபோது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
அப்போது அவனுக்கு தலையில் பலத்த அடிபட்டதில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனால் அவனால் கிணற்றுக்குள் நீந்தமுடியாமல் தத்தளித்தவாறு ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என்று அபயக்குரல் எழுப்பினான். உடனே அவனுடைய நண்பர்கள் கிணற்றுக்குள் குதித்து அவனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் பாலச்சந்தர் நீரில் மூழ்கினான்.
இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று நீண்டநேரம் போராடி பாலச்சந்தர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.